கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
தேனி:
கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் கண்மாய்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேவேளை, மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவி மற்றும் நீர்நிலைகளில் குளிக்கும் போது வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்