இனி 45 நாட்கள் காத்திருக்க வேண்டாம்..! LPG சிலிண்டர் புக்கிங் இடைவெளி 25 நாட்களாக குறைப்பு.
புதுடெல்லி | செப்டம்பர் 8
சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) முன்பதிவு தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி கிராமப்புறங்களில் வசிக்கும் வீட்டு உபயோக LPG நுகர்வோரும், 45 நாட்கள் காத்திருக்காமல் 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு (OMCs) இந்த புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோருக்கும் 25 நாட்கள் என்ற ஒரே முன்பதிவு இடைவெளி அமலுக்கு வருகிறது.
ஏன் இந்த மாற்றம்?
கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து LPG விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் இடைவெளி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் LPG விநியோக நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், நிலுவையில் இருந்த சிலிண்டர் முன்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கிராமப்புற நுகர்வோருக்கான 45 நாள் இடைவெளி நீக்கப்பட்டு, 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
யாருக்கு பயன்?
இந்த மாற்றத்தின் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை பெறுகின்றனர்.
இந்த புதிய விதிமுறையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் குறிப்பாக கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் இருந்த காத்திருப்பு காலம் குறைந்து, நுகர்வோருக்கு கூடுதல் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக்குரல்