மதுராந்தகம் இடைத்தேர்தல் முதல்வர் பிரசாரம்: QR அனுமதிச் சீட்டு உள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி – தவெக அறிவிப்பு.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே நாளை (25.09.2026) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளதாக தவெக தலைமை நிலையச் செயலகம் அறிவித்துள்ளது.
காவல்துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சி முழுமையாக அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
QR அனுமதிச் சீட்டு உள்ள 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தவெக தெரிவித்துள்ளது.
QR குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அனுமதிச் சீட்டு இல்லாத வேறு யாருக்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் அனுமதி கிடையாது என்றும் அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரிவினர் வர வேண்டாம்
பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்–சிறுமியர், பள்ளி மாணவ–மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோருக்கு QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என தவெக தலைமை நிலையச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குடிநீர், மருத்துவ வசதிகள் ஏற்பாடு
நிகழ்ச்சியில் பங்கேற்க QR அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால், அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள நேரலைகள் மூலம் காணுமாறும், QR அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க ஒத்துழைக்குமாறும் தவெக தலைமை நிலையச் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்