மார்பிங் வழக்கு: ஜாமீன் கிடைத்த மறுநாளே தற்கொலைக்கு முயன்ற 26 வயது இளைஞர்.

மலப்புரம்:

கேரள மாநிலம் மலப்புரத்தில் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கின் குற்றச்சாட்டுக்குள்ளான இளைஞர் ஒருவர், தனியார் விடுதியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் திருமலை ஓடன்குழி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சுபின் பாபு என்பவரே தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சுபின் பாபுவுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அதன்பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுபின் பாபு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மொபைல் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்ததாகவும், வேலை குறைவாக இருந்த நேரங்களில் போலி சமூக வலைதளக் கணக்குகளை உருவாக்கி மலபார் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை தேடி, அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்பியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பியதை சுபின் பாபு ஒப்புக்கொண்டதாகவும், பொருளாதார லாபத்தை நோக்கமாகக் கொண்டு புகைப்படங்களை பரப்பியதாக விசாரணையில் தெரியவந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளிடமிருந்து இதுபோன்ற மார்பிங் புகார்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவின் எர்ணாகுளம் திருக்காக்கரா பகுதியில் உள்ள பாரத் மாதா கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிய வழக்கில் ஸ்ரீஹரி என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான புகார்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படும் இந்த வழக்கில், தற்போது சுபின் பாபு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கில் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply