தீயில் வீடு சாம்பல்..! தாயும் மகனும் தவிப்பு — தவெக சார்பில் நிவாரணம்!

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிக்குப்பத்தில் மின் கசிவு காரணமாக கூரை வீடு தீக்கிரையான நிலையில், பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினர்.

செட்டிக்குப்பத்தைச் சேர்ந்த தாஜ் நிஷா, கணவரை இழந்த நிலையில் தனது மகனுடன் சிறிய கூரை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மின் கசிவால் கூரையில் தீப்பற்றி, நொடிப்பொழுதில் வீடு முழுவதும் தீக்கிரையானது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாஜ் நிஷாவும் அவரது மகனும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் வீட்டில் இருந்த துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலை குறித்து அறிந்த விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துராஜ் தலைமையில் செட்டிக்குப்பம் கிராமத்திற்கு நேரில் சென்று தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, தாஜ் நிஷா மற்றும் அவரது மகனுக்கு ஆறுதல் தெரிவித்த நிர்வாகிகள், முத்துராஜின் சொந்த நிதியிலிருந்து ரூ.5,000 ரொக்க உதவி வழங்கினர். மேலும், அரிசி, மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் நிவாரணமாக வழங்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் ‘வெற்றி வீடு திட்டம்’ மூலம் விரைவில் புதிய நிரந்தர வீடு பெற்றுத் தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக முத்துராஜ் உறுதியளித்தார்.

வீட்டை இழந்து தவித்த குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, உடனடி அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தவெக நிர்வாகிகளின் நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply