ஒரு செடியில் 100 காய்கள் வரை: மத்தூரில் இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயி.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமரன், இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து சிறந்த மகசூலை பெற்றுள்ளார்.
விவசாயி குமரன் தனது நிலத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, இயற்கை முறைகளைப் பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு செடிக்கு சுமார் 70 முதல் 100 நிலக்கடலைக் காய்கள் வரை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலைச் செடிகளில் அதிகளவில் காய்கள் கிடைத்திருப்பது அப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இயற்கை வேளாண்மை முறைகளைப் பின்பற்றி சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன், விவசாயத்தில் மாற்று அணுகுமுறைகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தூர் பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன அமைப்பாளர் கிரிஜா கூறுகையில், இயற்கை விவசாய முறைகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் வேளாண் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்தூர் பகுதியில் இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றுள்ள விவசாயி குமரனின் முயற்சி, இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு கவனம் ஈர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்