மத்தூரில் மறைந்து கிடக்கும் வேகத்தடைகள்: விபத்து அபாயத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை, வாகன ஓட்டிகளுக்கு முறையாகத் தெரியாத நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த வேகத்தடையில் வெள்ளை சாயம் பூசப்படாமலும், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் எவ்வித எச்சரிக்கைப் பலகையும் அமைக்கப்படாமலும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேகத்தடையை எதிர்பாராமல் கடக்கும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் சூழல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், மாரியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள வேகத்தடையும் போதிய அடையாளம் இல்லாமல் காணப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அங்கும் வெள்ளை சாயம் பூசப்படாததுடன், வேகத்தடை இருப்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கைப் பலகையும் இல்லை என கூறப்படுகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் வேகத்தடைகள் தெளிவாகத் தெரியாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மத்தூர் பகுதியில் உள்ள வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவற்றில் வெள்ளை சாயம் பூசி தெளிவான அடையாளங்களை ஏற்படுத்துவதுடன், தேவையான இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளையும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.

Leave a Reply