மேகமலை மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்..! நீதிமன்ற புறக்கணிப்பு

தேனி:

மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து விவசாயம் செய்து வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று (செப்.7) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேகமலை மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தேனி வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இன்று காலை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள், காலை 10 மணியளவில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேகமலை விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply