மெஸ்ஸி பெயரில் மோசடி புகார்..! களமிறங்கியது SIT — ADGP பி.விஜயன் தலைமையில் விசாரணை

கேரளாவுக்கு லயனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணியை அழைத்து வருவதாகக் கூறி நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ADGP பி.விஜயன் தலைமை வகிக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஸ்பான்சரைத் தேர்வு செய்த விதம், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சலுகைகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், அரசின் விதிமுறைகள் மீறப்பட்டதா, அரசு அமைப்புகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டனவா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

குறிப்பாக, மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியை கேரளாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிய காலம் முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அரசு உத்தரவுகள், நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் SIT விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவில் காவல்துறை உயரதிகாரிகள், கிரைம் பிராஞ்ச் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற உள்ளனர். தேவைக்கேற்ப கூடுதல் அதிகாரிகளையும் குழுவில் இணைத்துக்கொள்ள SIT தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸியின் பெயரைப் பயன்படுத்தி நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ADGP தலைமையில் புதிய SIT விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply