கனமழையால் பாதிக்கப்பட்ட தியாகராய நகர் பகுதிகளில் அமைச்சர் என். ஆனந்த் நேரில் ஆய்வு!

சென்னை: நேற்று இரவு பெய்த கனமழையால் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் தேங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததும், தனது இல்லத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களின் சிரமங்களைக் கேட்டறிந்தார்.

முறிந்து விழுந்த மரத்தை அகற்ற உத்தரவு

பலத்த மழையால் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அமைச்சர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மரத்தை விரைந்து அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்குமாறு அறிவுறுத்தினார்.

நியாயவிலைக் கடையில் ஆய்வு

தொடர்ந்து, அருகிலிருந்த நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மழைக்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மழைநீரை அகற்ற நடவடிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குக் காலை உணவு வழங்கிய அமைச்சர், சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை மின்மோட்டார்கள் மூலம் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறிப்பாக, பனகல் பூங்கா பகுதியில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அங்கு தேங்கிய நீரை உடனடியாக அகற்றி போக்குவரத்தைச் சீரமைக்க அறிவுறுத்தினார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் கே. அப்புனு (எ) வேல்முருகன், அரசு அலுவலர்கள், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply