கேரளம் : காந்தபுரம் சர்ச்சைக்கு நடுவே புதிய நகர்வு? முஸ்லிம் லீக்–ஏபி சுன்னி தலைவர்கள் சந்திப்பு!
காந்தபுரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விவாதம் நீடித்து வரும் நிலையில், ஏபி சுன்னி பிரிவுடன் முஸ்லிம் லீக் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமஸ்தாவில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் கேரள வருகையையொட்டி காந்தபுரம் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பாணக்காடு சாதிக்கலி ஷிஹாப் தங்கள் கலந்து கொண்டார்.
சமஸ்தா பிளவுக்குப் பின்னர் பாணக்காடு தங்கள் மார்க்கஸில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அவருடன் மூத்த முஸ்லிம் லீக் தலைவர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டியும் சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏபி சமஸ்தா தலைவர்களுடன் இருவரும் சந்திப்பு நடத்தினர். காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார், எஸ்.வை.எஸ். மாநிலத் தலைவர் அப்துல் ஹக்கீம் அஸ்ஹரி மற்றும் கேரள முஸ்லிம் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் கலீல் புஹாரி தங்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
காந்தபுரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு முஸ்லிம் லீக் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு கேரள அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்