தருமபுரியில் 2,000-வது நாளை எட்டிய அன்னதான சேவை: 14 ஆண்டுகளாக மனிதநேயப் பணியில் ‘மை தருமபுரி’.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய சேவைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ‘மை தருமபுரி’ அமைப்பு, அரசு மருத்துவமனை அருகே தொடங்கிய அன்னதான சேவையின் 2,000-வது நாளை சிறப்பாகக் கொண்டாடியது.
2,000 நாட்களை கடந்த அன்னதான சேவை
கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பார்வையாளர்கள் மற்றும் பசியால் தவிப்போருக்காக அன்னதானம் வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நல்ல உள்ளங்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த அன்னதான சேவை, தற்போது 2,000-வது நாளை எட்டியுள்ளது.
இதனை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், சாதம், சாம்பார், ரசம், பழங்கள் மற்றும் இனிப்புகள் உள்ளிட்ட உணவுகள் பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டன.
பல்வேறு துறையினர் பங்கேற்பு
2,000-வது நாள் சிறப்பு நிகழ்வில் உதவும் உள்ளங்கள் மாணிக்கம், தருமபுரி ரோட்டரி மிட்டவுன் கிளப், மஹாலக்ஷ்மி சில்க்ஸ் வெங்கடேஷ் பாபு, ஆசிரியர் சௌந்திரபாண்டியன், பிஎஸ்பி சுரேஷ் குமார், தீபக்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனை சிந்து தீபக், ஜாஸ் கம்பியூட்டர் ஜெயவேல், பொறியாளர் கார்த்திக்கேயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், அமரர் ஊர்தி ஓட்டுநர்களும் நிகழ்வில் பங்கேற்று அன்னதான சேவைக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.
தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு
அன்னதான சேவையை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா தலைமையில் அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சண்முகம், கணேஷ் மற்றும் தன்னார்வலர்கள் காதர், விஜயகாந்த், சித்யா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் மற்றும் பசியுடன் வருபவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வரும் இந்த சேவை, பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட அன்னதான சேவை 2,000-வது நாளை எட்டியிருப்பது, தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்