“இரத்ததானம் செய்வோம்; உயிர்களைக் காப்போம்” – இரத்தக் கொடையாளர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து.
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு, தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பாற்றி வரும் அனைத்து இரத்தக் கொடையாளர்களுக்கும் முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பதுடன், மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டி வரும் இரத்தக் கொடையாளர்களை பாராட்டியுள்ளார்.
அறுவை சிகிச்சைகள், விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அவசர சூழல்களில் உயிர்களைக் காப்பதற்கு இரத்ததானம் இன்றியமையாதது என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் ஒரு மனிதனின் உயிரைக் காப்பதுடன் மட்டுமின்றி, அவரது குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்ததானம் செய்யும் கொடையாளர்கள் சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்களாக திகழ்வதாகவும், அவர்களின் தன்னலமற்ற சேவையும் உன்னதமான மனிதநேயமும் என்றும் போற்றத்தக்கவை என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்று, இரத்ததானம் செய்வதில் விழிப்புணர்வுடன் செயல்படும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“இரத்ததானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்!” என்ற அழைப்பையும் முதல்வர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்