கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாடுகள் மாயம்!
பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக முன்னாள் அறங்காவலர் தலைவர் மீது புகார் – போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருப்பத்தூர் – அக்டோபர் 14: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள நந்திபெண்டா நந்திகேசவராய பெருமாள் கோயிலில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக விட்டுச் சென்ற 30-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் மாயமானதாகப் புகார் எழுந்துள்ளது. இவற்றைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்கோயிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து நேர்த்திக்கடனாக மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளை விட்டுச் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 30-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் மாயமானதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாடுகள் எவ்வாறு மாயமானது, அவை விற்பனை செய்யப்பட்டனவா, விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலுக்குப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய கால்நடைகள் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணை முடிவிலேயே குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்