கோயிலுக்கு சென்ற பக்தர்கள் மீது திடீர் தேனீக்கள் தாக்குதல்: மலைப்பாதையில் அலறியடித்து ஓட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நெடுங்கல் ஊராட்சியில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
அதிகாலை முதலே 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மதியம் சுமார் 1 மணியளவில் பக்தர்கள் கூட்டமாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென கலைந்த தேன்கூடு
மலைப்பாதையில் இருந்த மரம் ஒன்றில் அமைந்திருந்த தேன்கூடு திடீரென கலைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏராளமான தேனீக்கள் கூட்டமாக வெளியேறி, அங்கு சென்று கொண்டிருந்த பக்தர்களை நோக்கி பறந்து வந்து கொட்டத் தொடங்கின.
எதிர்பாராத தேனீக்கள் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர். இதில் பலர் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்ததாகவும், சிலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மலையின் மேல் பகுதியில் சிக்கித் தவித்த பக்தர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர். மேலும், தேனீக்கள் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.
மருத்துவமனையில் சிகிச்சை
தேனீக்கள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாகவும், அவர்களது உறவினர்களின் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் நெடுங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட தேனீக்கள் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்