புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்பை’..! ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

சென்னை, செப். 3: தமிழ்நாட்டிற்கு ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் புதிய வளாகம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

20 லட்சம் சதுர அடியில் புதிய வளாகம்

தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் வகையில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலும், நவீன வசதிகளுடனும் கட்டிடங்கள் அமைக்கப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கோட்டை வளாகத்தில் இடப்பற்றாக்குறை

தற்போது தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடம் மற்றும் 1978ஆம் ஆண்டு கட்டப்பட்ட 10 தளங்களைக் கொண்ட கவிஞர் மாளிகை உள்ளிட்ட கட்டிடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், 6,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இவ்வளாகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் அரசுத் துறைகளின் பொறுப்புகளும், ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கோட்டை வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிர்வாகத்திற்கு புதிய கட்டமைப்பு

அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சட்டப்பேரவை வளாகமும் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட உள்ளதால், தமிழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் இது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டம், கட்டுமான காலஅட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply