பாலக்கோடு வழியாகச் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 4 பேருந்துகள் பிடிப்பு! மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை.

பாலக்கோடு, ஆக. 14:

தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து புலிகரை, சோமனஅள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சூடப்பட்டி, பிக்கனஅள்ளி, மல்லுப்பட்டி வழியாக ஓசூர் செல்லும் பேருந்துகள், சமீபகாலமாக அதியமான்கோட்டை–ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்வதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால், பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தும் ஏமாற்றமடைவதுடன், உரிய நேரத்திற்கு வேலைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணனிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், சோமனஅள்ளி–புலிகரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது, குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள ஊர்களுக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்ற நான்கு பேருந்துகளைப் பிடித்து, அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு உரிய வழித்தடத்தில் சென்று வர அறிவுறுத்தினார்.

மேலும், தொடர்ந்து ஊர்களுக்குள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பேருந்துகளை இயக்கினால், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், கிராமப்புறப் பயணிகளின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply