பாலக்கோடு அருகே சட்டவிரோத சிசு பாலினம் கண்டறியும் செயல்? பெண் செவிலியர் உட்பட இருவர் கைது!
பெண் சிசு எனத் தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய முயன்றதாகப் புகார் – ஸ்கேன் கருவிகள், மருந்துகள், இருசக்கர வாகனம் பறிமுதல்
பாலக்கோடு – அக்டோபர் 10: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வீட்டில் சட்டவிரோதமாகக் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்ததாக எழுந்த புகாரில், பெண் செவிலியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஸ்கேன் கருவிகள், மருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மேக்லாம்பட்டி கிராமத்தில் மைதிலி என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாகக் கர்ப்பிணிகளின் சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதாகவும், பெண் சிசு எனத் தெரியவந்தால் கருக்கலைப்பு செய்ய முயற்சிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சரவணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் பாரதி, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெகநாதன் மற்றும் மருத்துவர்கள் பாலசுப்ரமணியம், சிவகுரு ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மேக்லாம்பட்டி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டிற்கு கர்ப்பிணிப் பெண்கள் சென்று வருவதைக் கண்காணித்த மருத்துவக் குழுவினர், அந்த வீட்டில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அங்கு சட்டவிரோதமாகச் சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் நடவடிக்கை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பெண் சிசு எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணியும், பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு கர்ப்பிணியும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதற்காக அங்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு (36), பென்னாகரம் அருகே ரங்காபுரத்தைச் சேர்ந்த செவிலியர் பரிமளா (30) ஆகிய இருவரையும் மருத்துவக் குழுவினர் பிடித்தனர். அவர்களிடமிருந்த ஸ்கேன் கருவிகள், மருந்துகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மருத்துவர் பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில், வடிவேலு, பரிமளா ஆகியோருடன் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த கணகவள்ளி, மேச்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமி மற்றும் சட்டவிரோதச் செயலுக்காக வீட்டை வழங்கியதாகக் கூறப்படும் மைதிலி ஆகியோர் மீது பாலக்கொடு காவல் உதவி ஆய்வாளர்கள் மாரி, இளமதி ஆகியோர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்..
இதில் வடிவேலு, பரிமளா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் மைதிலி, கணகவள்ளி, மகாலட்சுமி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
மேலும், வடிவேலு மற்றும் பரிமளா மீது இதற்கு முன்பும் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிதல் மற்றும் கருக்கலைப்பு தொடர்பாக மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிவதும், அதன் அடிப்படையில் பாலினத் தேர்வுக் கருக்கலைப்பை மேற்கொள்வதும் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்