பாலக்கோடு காப்புக்காடுகளில் 250 கிலோ நெகிழி, குப்பைகள் அகற்றம்: வனத்துறையினர், மாணவர்கள் தூய்மைப் பணி.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்துக்கு உட்பட்ட எர்ரனஅள்ளி மற்றும் கணவனஅள்ளி காப்புக்காடு பகுதிகளில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு ‘நெகிழி இல்லா வனம்’ என்ற தலைப்பில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.
பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வனவர்கள் முனுசாமி, சின்னசாமி, வனக்காப்பாளர்கள் அருள்குமார், பிரபாகரன், சுருளிராஜன் உள்ளிட்ட வனத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
250 கிலோ நெகிழி, குப்பைகள் சேகரிப்பு
தூய்மைப் பணியில் பாலக்கோடு கலாம் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் காப்புக்காடு பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து கிடந்த நெகிழிப் பைகள் மற்றும் பல்வேறு வகையான குப்பைகளை சேகரித்து அகற்றினர்.
இந்தப் பணியின் மூலம் சுமார் 250 கிலோ நெகிழி மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்காக வழங்கப்பட்டது.
கடைகளில் விழிப்புணர்வு பிரசாரம்
இதனைத் தொடர்ந்து, ஐந்தாவது மைல் மற்றும் பூமரத்தூர் கிராமங்களில் உள்ள கடைகளுக்கு வனத்துறையினர் நேரடியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
வனப்பகுதிகளில் நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், வனப்பகுதிகளை தூய்மையாகப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வனப்பகுதிகளில் நெகிழிப் பொருட்கள் மற்றும் குப்பைகளை வீசுவதைத் தவிர்த்து, வன உயிரினங்களின் பாதுகாப்புக்கும், வனப்பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்