பாலக்கோடு செம்மநத்தம் கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை!
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே செம்மநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து, பெருமாள் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், செம்மநத்தம் கிராமக் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், அன்னதானம்
வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் சின்னபையன், மந்திரி கவுண்டர் நாகராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இந்நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக்குரல்