பாலக்கோடு ஸ்ரீ மூகாம்பிகை கல்லூரியில் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா – 701 மாணவிகளுக்கு பட்டம் வழங்கல்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் புஷ்பவல்லி வரவேற்புரையாற்றியதுடன், கல்லூரியின் ஆண்டறிக்கையையும் வாசித்தார்.
விழாவில் பாலக்கோடு ஸ்ரீ வித்யா மந்திர், ஆர்.எம்.எஸ். மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோவிந்தராஜ் தலைமை உரையாற்றினார். அப்போது, பட்டம் பெறும் மாணவிகள் ஒழுக்கத்துடனும் சிறந்த நற்பண்புகளுடனும் வாழ்வதுடன், தங்களது கல்வித் திறமைக்கு ஏற்ற சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வாழ்த்தினார்.
கல்லூரி நிர்வாக இயக்குநர் பிரித்திவிராஜ், பட்டம் பெறும் மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் செல்வம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், எதிர்காலத்தில் மாணவிகள் எதிர்கொள்ளும் தடைகளை தன்னம்பிக்கையுடன் கடந்து, வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தினமும் நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து, கல்லூரியில் செயல்பட்டு வரும் 15 துறைகளைச் சேர்ந்த 701 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பட்டம் பெற்ற மாணவிகள் அனைவரும் கல்லூரி முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி தெரிவித்தார்.
விழாவில் துணை முதல்வர்கள் முனைவர் தாமோதரன், முனைவர் முருகேசன், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்