பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் கிடுகிடு விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி; இல்லத்தரசிகள் அதிர்ச்சி.
பாலக்கோடு, அக். 3:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலக்கோடு நகரில் தினமும் காலை 7 மணி முதல் தக்காளி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு தக்காளி சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் தக்காளிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
விளைச்சல் குறைந்ததால் வரத்து சரிவு
பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது.
இங்கிருந்து தினமும் உள்ளூர் பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அதிகளவில் தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. காலை தொடங்கி இரவு வரை சந்தையில் தக்காளி விற்பனை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.10-க்கும் குறைவாக இருந்த விலை ரூ.50 வரை உயர்வு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது திடீரென விலை உயர்ந்துள்ளது.
தற்போது பாலக்கோடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 15 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி பெட்டி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது.
தக்காளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அன்றாட சமையலில் முக்கியப் பொருளாக உள்ள தக்காளியின் விலை அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விலை உயர வாய்ப்பு?
பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தக்காளி வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வரத்து குறைந்தால் வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்