“சமாதானம் பேசலாம்” என அழைத்து வாலிபர் மீது தாக்குதல்? – சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, குடும்பப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் பேசுவதாகக் கூறி வாலிபரை அழைத்து சிலருடன் சேர்ந்து தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே உள்ள காட்டுசீகலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (23). இவர் பாலக்கோடு அடுத்த கணபதி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் வித்யாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார்.
கடந்த 5-ஆம் தேதி வித்யாவின் அக்காவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்பதற்காக நவீன்குமார் தனது மனைவி வித்யாவுடன் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சரவணன் என்பவர், வித்யாவின் தந்தை தன்னிடம் வேலைக்கு வருவதாகக் கூறி ரூ.8 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாகவும், அந்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் வித்யாவிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு, தனது தந்தைக்கு கொடுத்த பணத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்றும், தன்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும் வித்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது வித்யாவை சரவணன் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரது கணவர் நவீன்குமார் கண்டித்ததாகவும், இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்று மாலை சமாதானம் பேச வேண்டும் எனக் கூறி நவீன்குமாரை சரவணன் அழைத்ததாகவும், அங்கு சிலருடன் சேர்ந்து அவரை தாக்கியதாகவும் நவீன்குமார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த நவீன்குமார் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நவீன்குமாரை சமாதானம் பேசுவது போல் அழைத்து தாக்குவதற்காகவே வரவழைத்ததாக சிலர் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தி, ஆடியோவின் உண்மைத்தன்மையையும் ஆய்வு செய்து, தவறு செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவீன்குமார் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணை முடிவிலேயே தாக்குதலுக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும்.
தமிழக வெற்றிக்குரல்