பாலக்காட்டில் ஆதிவாசி தொழிலாளி கொலை! – உடன் வசித்த பெண் கைது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்கலம் டேம் கடப்பாறை போத்தன்தோட்டில் உள்ள வீட்டில் ஆதிவாசி தொழிலாளி ஒருவர் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அவருடன் வசித்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடப்பாறை குஞ்சியார்பதி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரே உயிரிழந்தவர். இவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், இது கொலை சம்பவம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து, ராமசாமியுடன் வசித்து வந்த ஒலிப்பாறை கல்சாடி பகுதியைச் சேர்ந்த ருக்மணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ராமசாமியும் ருக்மணியும் கடந்த சுமார் ஒரு ஆண்டாக ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஏற்கனவே தனித்தனியாக திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சுமார் மூன்று மாதங்களாக, இருவரும் போத்தன்தோட்டில் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராமசாமியின் மரணத்துக்கான காரணம் மற்றும் கொலை நடைபெற்ற சூழ்நிலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ருக்மணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்