பாலக்காட்டில் 2 குழந்தைகள் மரணம்: தாய் மீது கொலை வழக்கு – போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே 5 மற்றும் 3 வயதுடைய சகோதர, சகோதரி குழந்தைகள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் தாய் நிவேத்யா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்தது. 5 வயது சிறுமி ஜெனிபர் மற்றும் 3 வயது சிறுவன் ராபின் ஆகிய இருவரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்டத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடைபெற்றபோது குழந்தைகளின் தந்தை ஜான் வீட்டில் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, குழந்தைகளின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளை நிவேத்யா சரியாக கவனிப்பதில்லை என்றும், அவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நிவேத்யாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விரிவாக விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, குழந்தைகளை கொலை செய்ததாக நிவேத்யா ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறியுள்ளனர். குழந்தைகள் இருப்பதால் தன்னால் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றும், தொடர்ந்து படிக்கவும் மாடலிங் துறைக்கு செல்லவும் விருப்பம் இருந்ததாகவும், குழந்தைகள் அதற்கு தடையாக இருந்ததால் அவர்களை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிவேத்யாவின் கணவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், நிவேத்யாவுக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக தற்போது எந்த தகவலும் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது நிவேத்யா மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நபராக உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் மரணம் தொடர்பான முழுமையான பின்னணி, சம்பவம் நடைபெற்ற விதம் மற்றும் கிடைக்கக்கூடிய பிற ஆதாரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். இதுகுறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யவும்.
தமிழக வெற்றிக்குரல்