பாலக்கோடு அருகே ஸ்ரீ மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஊர்மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா கடந்த 27ஆம் தேதி வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை முதல் நடைபெற்றது. கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. வேத பாராயணம் மற்றும் மங்கள இசை முழங்க பூர்ணாஹுதி நடைபெற்றது.

பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்களது தலைமீது சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஊர்மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்களை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொரத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Leave a Reply