பழனி அருகே அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் – வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!

பழனி, செப். 2:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தில் அமைந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில், ஆவணி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி பிரம்மோற்சவம்

அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத அகோபில வரதராஜப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற திருக்கல்யாணம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு பட்டாடைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்கவும், மங்கள வாத்திய இசை ஒலிக்கவும் மங்கலநாண் சூட்டுதல் மற்றும் மாலை மாற்றும் வைபவங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பூப்பந்து, தேங்காய் உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பெண்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஊஞ்சல் மற்றும் திருமணப் பாடல்களைப் பாடி, சுவாமிக்கு ஆரத்தி எடுத்தனர்.

திருவள்ளரை கோபாலகிருஷ்ண பட்டர் தலைமையில் பாலாஜி பட்டர், கல்யாணராமன் பட்டர், கார்த்திக் அய்யங்கார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பாரிவேட்டை, திருத்தேரோட்டம் நடைபெறுகிறது

ஆவணி பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக பாரிவேட்டை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளன.

வரும் செப்டம்பர் 2ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் ஆவணி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

கோயில் நிர்வாகம் ஏற்பாடு

விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வெங்கடேஷ் தலைமையில் கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply