மலைக்கிராம மக்களுக்கு இனி கவலை இல்லை! பேரணாம்பட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!
வேலூர்:
பேரணாம்பட்டு பகுதியில் உள்ள மலைக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நேற்று (13-09-2026) நடைபெற்றது.
மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில் சிரமம் இருந்து வந்தது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு, மலைக்கிராம மக்களின் மருத்துவ அவசரத் தேவைகளுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய செயலாளர்கள் A. சத்தியகுமார் மற்றும் M. ஹரிஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் K. சிந்தா, புதிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மலைக்கிராம மக்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், தனது சொந்த முயற்சியில் பொதுமக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கிய ஆசிரியர் M. தினகரனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஆசிரியர் M. தினகரன் தனது சொந்த முயற்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளார்.
விழாவில் ஊர் பெரியவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் மலைக்கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆசிரியர் M. ஏகநாதன் நன்றியுரை வழங்கினார்.
தமிழக வெற்றிக்குரல்