பேரணாம்பட்டில் இரவு நேர தொடர் மின்வெட்டு! நிரந்தர தீர்வு கோரி எம்.எல்.ஏ.விடம் மனு.

பேரணாம்பட்டு:

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர் மின்வெட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன், சிறு தொழில் செய்வோர், வியாபாரிகள் மற்றும் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மின்சாரத் தடையால் குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தவெக சார்பில் கோரிக்கை மனு

இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் நிலவும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. சிந்து அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஒன்றிய செயலாளர்கள் ஏ. சத்தியகுமார், எம். ஹரிஷ் பாபு ஆகியோர் தலைமையில் தவெக நிர்வாகிகள் இந்த மனுவை அளித்தனர்.

மின்வாரிய அதிகாரியிடம் உடனடி பேச்சு

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. கே. சிந்து, பேரணாம்பட்டு பகுதியில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய செயற்பொறியாளரை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பேரணாம்பட்டு பகுதியில் சீரான மின்சாரம் வழங்கவும், பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை சரிசெய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு பகுதியில் தொடரும் மின்வெட்டு பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply