போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு!
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட கூடுதல் மருத்துவமனைக் கட்டிடத்தை, தொழில்துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான கீர்த்தனா திறந்து வைத்தார்.
இதற்கான திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் கீர்த்தனா, புதிய கட்டிடத்தின் ரிப்பனை வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
4 பச்சிளம் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்
அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த 4 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் திட்டத்தின்’ கீழ் அமைச்சர் தங்க மோதிரங்களை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து, பணி நியமனம் பெற்ற 5 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
நவீன மருத்துவ வசதிகள்
பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கூடுதல் கட்டிடத்தில், நவீன அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, நவீன பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர், மருத்துவமனை வளாகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளை ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதிய கூடுதல் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மேம்பட்ட மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக்குரல்