காவலர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..! “பணிச்சுமையை குறைத்து நவீனமயமாக்குவோம்”.
காவலர் நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழக காவல்துறையினருக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை உருவான நாளை நினைவுகூரும் வகையில் காவலர் நாள் கொண்டாடப்படுவதாக தனது சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தில் அமைதியை நிலைநாட்டவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும் காவல்துறையினர் தன்னலமின்றி பணியாற்றி வருவதாக பாராட்டிய முதலமைச்சர், குற்றங்களைத் தடுப்பதுடன், ஆபத்தான சூழல்கள் மற்றும் பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் காவல்துறையினர் துணிச்சலுடன் களப்பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
காவலர்களின் நலனுக்கு அரசு முன்னுரிமை
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பணித்திறனை மேம்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத் தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்வதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களும் காவல்துறையினரும் நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து செயல்பட்டு, “அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என காவலர் நாளில் உறுதியேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக்குரல்