ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!
செப்.19-ல் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம் – காலை 9 முதல் மாலை 5 மணி வரை
சென்னை :
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக, மின்னணு குறியீட்டு அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவு பணி கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48 சதவீத eKYC பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களின் eKYC பதிவையும் 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், வரும் 19.09.2026 சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து, மாநிலம் முழுவதும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நியாய விலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெறும். இதன் மூலம் இதுவரை கைரேகை பதிவு மூலம் eKYC செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், செப்டம்பர் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை சரிபார்க்கும் வகையில் இந்த eKYC நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை eKYC பதிவு செய்யப்படாதவர்கள் தங்களது குடும்ப அட்டை தொடர்பான விவரங்களைச் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு eKYC பதிவை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களின் eKYC பதிவை முழுமையாக நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களின் eKYC பணியை விரைவாக நிறைவு செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளைத் தொடர்ந்து பெறுவதற்கான பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்