ரிப்போர்டர் டிவி அலுவலகத்தில் அதிகாலை போலீஸ் சோதனை! செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு!
கொச்சி:
ரிப்போர்டர் பிராட்காஸ்டிங் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை என்ற பெயரில் அத்துமீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிகாலை கொச்சியில் உள்ள ரிப்போர்டர் டிவி அலுவலகத்திற்கு போலீசார் குழுவாக வந்ததாகவும், அங்கு பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களின் செல்போன்கள் உள்ளிட்டவற்றை தங்களது கட்டுப்பாட்டில் வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய நியூஸ் டெஸ்க்கிற்குள் போலீசார் நுழைந்து, பணிகள் பாதிக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டதாக ரிப்போர்டர் டிவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சோதனை திருக்காக்கரா ஏசிபி தலைமையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தொடர்பாக டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், சோதனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் டிஜிபி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனைக்கான காரணம் மற்றும் பிற விவரங்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் தயாராக இல்லை என்றும், அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் நிறுவன வளாகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பணிக்கு வந்த ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் செல்போன்களும் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ரிப்போர்டர் டிவியின் ஒளிபரப்பை பாதிக்கும் நோக்கத்துடன் செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் நிறுவனத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போலீஸ் சோதனை தொடர்பான சட்டபூர்வ நடைமுறை, சோதனைக்கான காரணம் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழக வெற்றிக்குரல்