சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அரீக்கர சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு!

பத்தனம்திட்டா: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக அரீக்கர சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குலுக்கல் முறையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் புளிமூடு பகுதியைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரி, தற்போது பழவங்காடி கோயிலில் மேல்சாந்தியாகப் பணியாற்றி வருகிறார். சபரிமலை மேல்சாந்தி பதவிக்காக இதுவரை ஐந்து முறை விண்ணப்பித்துள்ள அவர், மூன்று முறை தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

“எதிர்பார்ப்பு இருந்தது” – சங்கரன் நம்பூதிரி

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக சங்கரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வு தொடர்பாகத் தனக்கு எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாளிகப்புறம் கோயில் மேல்சாந்தியாக ஏ. தாமோதரன் நம்பூதிரி தேர்வு

சபரிமலை கோயிலுடன் தொடர்புடைய மாளிகப்புறம் அம்மன் கோயிலின் மேல்சாந்தியாக ஏ. தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகராவைச் சேர்ந்த இவர், தற்போது பய்யோளி கீழூர் சிவன் கோயிலில் மேல்சாந்தியாகப் பணியாற்றி வருகிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகப்புறம் கோயிலின் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இருவரும் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.

Leave a Reply