தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு! 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு – லண்டனில் முக்கிய ஒப்பந்தம்!
லண்டன்: தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்களை செயல்படுத்தவும், சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று (14.09.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் இந்த முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக சுமார் 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவதுடன், வாகன உதிரிபாகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளில் மாநிலத்தின் நிலையை வலுப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
லண்டனில் நடைபெறும் தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதன் மூலம் புதிய தொழில்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, சம்வர்தனா மதர்சன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.11,000 கோடி முதலீடும், 7,000 வேலைவாய்ப்புகளும் உருவாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தமிழ்நாட்டின் தொழில் மற்றும் உற்பத்தித் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் முக்கிய முதலீட்டு நடவடிக்கையாக அமைந்துள்ளது.
தமிழக வெற்றிக்குரல்