நாய்க்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: சத்தியமங்கலத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்!

சத்தியமங்கலம், செப். 5:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மூன்று மாத நாய்க்குட்டியை தீயணைப்புத் துறையினர் 60 அடி ஆழத்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் வரதம்பாளையம், சுண்ணாம்பு காரர் சந்து பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. சுமார் 60 அடி ஆழமும், 4 அடி அகலமும் கொண்ட இந்த குறுகலான கிணற்றுக்குள், நேற்று மூன்று மாதமே ஆன சிறிய நாய்க்குட்டி ஒன்று எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தது. கிணற்றுக்குள் விழுந்த நாய்க்குட்டி வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டு சத்தமிட்டுள்ளது.
நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கிணறு மிகவும் குறுகலாக இருந்ததால் மீட்புப் பணியில் சவால் ஏற்பட்டது. எனினும், தீயணைப்பு வீரர் ஒருவரின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, மற்ற வீரர்கள் இருபுறமும் பிடித்துக் கொள்ள, அவர் மெதுவாக கிணற்றுக்குள் இறக்கப்பட்டார்.
சுமார் 60 அடி ஆழத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர், அங்கிருந்த நாய்க்குட்டியை எவ்வித காயமுமின்றி பத்திரமாகப் பிடித்து மேலே கொண்டு வந்தார். உயிருடன் மீட்கப்பட்ட நாய்க்குட்டியைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
மிருகத்தின் உயிரையும் பொருட்படுத்தி, ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கி துரிதமாகச் செயல்பட்ட சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்களின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply