சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பற்றி எரியும் காட்டுத் தீ – 50 ஏக்கர் வனப்பகுதி பாதிப்பு!
ஈரோடு, செப். 2:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால், சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி தீயில் பாதிக்கப்பட்டுள்ளது. தீ மேலும் பரவாமல் தடுக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், யானை, புலி, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. மேலும், அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் பல்வேறு தாவர இனங்களும் இப்பகுதியில் காணப்படுகின்றன.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதி கம்பத்துராயன் கிரி வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் மற்றும் வன வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இரவு நேரம் என்பதால் வனப்பகுதிக்குள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீ பரவி வருவதால், இதுவரை சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் உள்ளிட்ட தாவரங்கள் தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ மேலும் பரவி வனப்பகுதிக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக இருப்பதால், காட்டுத் தீயால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீயை விரைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக வெற்றிக்குரல்