சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்..! அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்களும் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில், Cerebral Palsy பாதிப்புடன் வளர்ந்த ஒரு குழந்தை, தனது தாயின் விடாமுயற்சியாலும் தொடர்ந்து வழங்கப்பட்ட பயிற்சியாலும் வங்கித் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உதவி மேலாளராக பணியாற்றி வருவதை அமைச்சர் அருண்ராஜ் சுட்டிக்காட்டினார்.

அந்த தாயாரின் விடாமுயற்சியையும், குழந்தையின் சாதனையையும் பாராட்டி அமைச்சர் கேடயம் வழங்கி கௌரவித்தார். மேலும், தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான பூப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த வீரர்களுக்கும் பாராட்டு வழங்கப்பட்டது.

“சம வாய்ப்பு கொடுத்தால் சிறப்பு குழந்தைகளாலும் சாதிக்க முடியும்”

ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் திறமைகளை கண்டறிந்து, உரிய ஊக்கமும் பயிற்சியும் வழங்கினால் சிறப்பு குழந்தைகளும் சாதிக்க முடியும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதற்கான முன்னெடுப்புகளை முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறப்பு குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு சம வாய்ப்பை உருவாக்கும் வகையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்ச்சி, “ஒவ்வொரு குழந்தையும் ஒரு சாதனையாளர்” என்ற நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

Leave a Reply