‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ பட நடிகை சாவித்ரி ஸ்ரீதரன் காலமானார்.
கோழிக்கோடு: மலையாளத் திரைப்படமான ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம்பிடித்த பிரபல நாடக மற்றும் திரைப்பட நடிகை சாவித்ரி ஸ்ரீதரன் காலமானார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் நீண்ட காலமாக படுக்கையில் இருந்த சாவித்ரி ஸ்ரீதரனின் மறைவு, நாடகம், திரைப்படம் மற்றும் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ மூலம் கிடைத்த அங்கீகாரம்
2018ஆம் ஆண்டு வெளியான ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ திரைப்படத்தில் நடித்ததற்காக சாவித்ரி ஸ்ரீதரனுக்கு 2019ஆம் ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டது. மேலும், 66-வது தேசிய திரைப்பட விருதுகளில் அவரது நடிப்புக்கு சிறப்பு பாராட்டும் (Special Mention) கிடைத்தது. சிறந்த நடிகைக்கான கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும் அவர் பெற்றுள்ளார்.
16 வயதில் தொடங்கிய நாடகப் பயணம்
சாவித்ரி ஸ்ரீதரனின் நாடக வாழ்க்கை சுமார் 40 ஆண்டுகள் நீடித்தது. தனது 16-வது வயதில் வளயநாடு கலாசமிதியின் ‘கருத்த வெள்ள’ என்ற நாடகத்தின் மூலம் முதன்முதலில் மேடை ஏறினார். அதன்பின்னர் சுமார் 20 ஆண்டுகள் அமெச்சூர் நாடகத் துறையில் பணியாற்றிய அவர், பின்னர் தொழில்முறை நாடக உலகில் நுழைந்தார்.
‘கடவு’ மூலம் திரையுலகில் அறிமுகம்
1991ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய ‘கடவு’ திரைப்படத்தில் தாயாக நடித்ததன் மூலம் சாவித்ரி ஸ்ரீதரன் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பின்னர் சில காலம் திரைப்படத் துறையில் இருந்து விலகியிருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் கவனம் பெற்றார்.
நாடக மேடையில் பல ஆண்டுகள் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சாவித்ரி ஸ்ரீதரன், திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அவரது மறைவுக்கு நாடக மற்றும் திரைப்படத் துறையினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்குரல்