10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! மார்ச் 3 முதல் தேர்வுகள் தொடக்கம் – முழு விவரம்.
சென்னை: தமிழகத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் 14.10.2026 அன்று வெளியிட்டார். இதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதியும் தொடங்க உள்ளன.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 2027ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி நிறைவடைகின்றன. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வுடன் பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்த வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
- மார்ச் 17: தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
- மார்ச் 25: ஆங்கிலம்
- மார்ச் 31: கணிதம்
- ஏப்ரல் 5: அறிவியல்
- ஏப்ரல் 9: சமூக அறிவியல்
- ஏப்ரல் 12: விருப்ப மொழிப்பாடம்
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு யாருக்கு?
11ஆம் வகுப்பில் ஏற்கெனவே தேர்ச்சி பெறாமல் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கான (அரியர்) பொதுத்தேர்வுகள் மட்டும் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி நிறைவடைகின்றன.
தேர்வு நேரம் என்ன?
வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும். இதில் வினாத்தாளைப் படிப்பதற்கும், தேர்வர்கள் தங்களது விவரங்களைச் சரிபார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதற்கும், படித்தவற்றைத் தேர்வில் சிறப்பாக எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கற்றல் என்பது மாணவர்களுக்குச் சுமையாக இல்லாமல் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்களது பாடத்திட்டங்களைத் திட்டமிட்டு முடித்து, தேர்வுக்குத் தயாராக வேண்டிய காலம் தொடங்கியுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வத் தேர்வு அட்டவணையைப் பார்த்து, பாடவாரியாகத் தேர்வு தேதிகளைக் குறித்துக்கொண்டு தயாராகலாம்.
தமிழக வெற்றிக்குரல்