டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் பெறலாம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு புதிய வசதி!
சென்னை, செப்.15: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு எளிதையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கும் நோக்கில், ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) தொடர்பான பல்வேறு சேவைகளை இணையதளம் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் பெறும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 15.09.2026 முதல் ஓட்டுநர் உரிமம் (Driving Licence – DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (Registration Certificate – RC) ஆகியவற்றை அஞ்சல் வழியாக வீட்டிற்கே அனுப்பும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் சேவைகள்
பொதுமக்கள் இனி RTO அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை குறைக்கும் வகையில், SARATHI, VAHAN, DigiLocker மற்றும் mParivahan உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.
குறிப்பாக:
- SARATHI இணையதளம் மூலம் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தைப் (DL) பதிவிறக்கம் செய்தல்.
- VAHAN இணையதளம் மூலம் டிஜிட்டல் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) பதிவிறக்கம் செய்தல்.
- SARATHI மூலம் ஓட்டுநர் உரிமத்தில் கைப்பேசி எண்ணை பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல்.
- VAHAN மூலம் வாகன உரிமையாளரின் கைப்பேசி எண்ணை பதிவு செய்தல் அல்லது புதுப்பித்தல்.
- DigiLocker செயலி மூலம் டிஜிட்டல் DL மற்றும் RC-ஐ பதிவிறக்கம்/பதிவிறக்கி பயன்படுத்துதல்.
- mParivahan செயலி மூலம் டிஜிட்டல் DL மற்றும் RC-ஐ பதிவிறக்கம்/பதிவிறக்கி பயன்படுத்துதல்.
RTO அலுவலகங்களில் உதவி மையங்கள்
இந்த இணையவழிச் சேவைகளை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) Help Desk-கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உதவி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழிமுறைகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் தாங்களாகவே இணையவழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
மேலும், போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ TNSTA Official YouTube Channel மூலமாகவும் இந்த நடைமுறைகள் குறித்த விளக்க வீடியோக்களை பொதுமக்கள் காணலாம்.
டிஜிட்டல் DL / RC-க்கு வண்ண அச்சுப் பிரதி
டிஜிட்டல் DL அல்லது RC-ன் அச்சுப் பிரதி தேவைப்படும் பொதுமக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள எந்தவொரு இ-சேவை மையத்திலும் தங்களது கைப்பேசி எண்ணிற்கு பெறப்பட்ட SMS-ஐ காண்பித்து, ஒரு ஆவணத்திற்கு ரூ.60 கட்டணம் செலுத்தி வண்ண அச்சுப் பிரதியை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுரை
இணையவழிச் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் RTO அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நேர விரயம் மற்றும் சிரமங்கள் குறைவதுடன், சேவைகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகன உரிமையாளர்கள் தங்களது ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணை தொடர்புடைய பதிவுகளில் சரியாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த புதிய டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்