கனமழை எச்சரிக்கை: பால், மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – 250 படகுகள் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்
சென்னை, அக்டோபர் 18:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பால், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் சூழலில், மழைநீர் தேங்குதல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மழைநீரை அகற்றுதல், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மழை முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 1.04 லட்சம் பேர் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக 250 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் மீனவர்களின் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கனமழையால் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அத்தியாவசிய மருந்துகள், பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களைத் தேவைக்கேற்ப முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தேவையின்றிச் செல்வதைத் தவிர்த்து, அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
தமிழக வெற்றிக்குரல்