ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஏன் இல்லை? அமைச்சர் தமிழன் பார்த்திபனின் நகைச்சுவை பதில் வைரல்!

சென்னை, ஆக. 29:

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் நிலையில், ஆண்களுக்கும் இதுபோன்ற இலவச பயணத் திட்டம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அளித்த நகைச்சுவையான பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படுவது போல ஆண்களுக்கும் இலவச பயணத் திட்டம் கொண்டு வரப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர், “என் தங்கையை உங்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். தங்கையிடம் இருந்து பணம் கேட்டு மச்சானாகிய உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படுகிறது” என்ற பொருளில் பதிலளித்தார்.

மேலும், பெண்களின் பயணத்திற்கான கட்டணத்தை குடும்பத்தில் உள்ள ஆண்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாமல், அவர்களது பணத்தை மிச்சப்படுத்தும் வகையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். இந்த பதில் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்களுக்கு இலவச பயணம்

தமிழகத்தில் பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கான ஆலோசனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் கூறியிருந்தார்.

அனைத்து பேருந்துகளிலும் ஏசி வசதி?

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக வாங்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், கிராமங்கள் மற்றும் நகரங்களை சிறப்பாக இணைக்கும் வகையில் பேருந்து சேவைகளை விரிவுபடுத்தவும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப மினி பேருந்து சேவைகளை இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் குறித்த கேள்விக்கு அமைச்சர் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply