ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்.

சென்னை, ஆக. 29:

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று (ஆகஸ்ட் 29) குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணியை முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்கள் தங்கள் ரேஷன் கடைக்குச் சென்று இந்தப் பணியை முடித்துக்கொள்ளலாம்.

ஏன் கைவிரல் ரேகை பதிவு?

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்க்க கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணிகள் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வருகின்றன.

96.21 சதவீதம் பணிகள் நிறைவு

தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை ரேஷன் அட்டைகளில் 96.21 சதவீத கைவிரல் ரேகை சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பணிகளையும் முடித்து 100 சதவீத இலக்கை எட்டும் வகையில் இன்று மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

ரேஷன் அட்டை ஏன் முக்கியம்?

ரேஷன் அட்டை மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களின் அளவும் மாறுபடும்.

இதுமட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பேரிடர் கால நிவாரணங்களைப் பெறுவதற்கும் குடும்ப அட்டை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் அட்டைதாரர்கள், இன்று நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply