தமிழகத்தில் மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற புதிய திட்டம்! ‘துளி’ இலச்சினையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்

அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆய்வு – வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும்

சென்னை, அக்டோபர் 21:

தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ‘துளி’ என்ற விழிப்புணர்வு இலச்சினையைத் திறந்து வைத்து, மாநிலம் தழுவிய மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைமையகத்தில் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான ‘துளி’ இலச்சினையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குறும்படத்தையும் பார்வையிட்டார்.

மழைநீர் சேமிப்புக்கு அரசு சிறப்பு நடவடிக்கை

அதிகரித்து வரும் நீர்த் தேவை, நகரமயமாக்கல், மாறிவரும் மழைப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மழைநீரைச் சேகரித்து முறையாகப் பயன்படுத்துவதும் நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாப்பதும் அவசியமாகியுள்ளது.

இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் புதுப்பித்தல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் பிற கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் கட்டமைப்புகள் ஆய்வு

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முழுமையாகச் செயல்படும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களில் உள்ள மேற்கூரைகள், நீர்வழிப் பாதைகள், வடிகட்டும் அறைகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.

புதிய கட்டடங்கள் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள வீடுகள், குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்படும். நிலத்தின் தன்மை மற்றும் நிலத்தடி நீரியல் சூழலுக்கு ஏற்ப மழைநீர் செறிவூட்டும் அகழிகள், நீர் ஊடுருவும் குழிகள், செறிவூட்டும் கிணறுகள், வண்டல் தடுப்புகள் மற்றும் வடிகட்டும் அமைப்புகள் உருவாக்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பொறுப்பு

அரசுத் துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது வளாகங்களில் மழைநீரைச் சேகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கும், நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமான இடங்களில் புதிய நகர்ப்புற மற்றும் ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டங்களிலும் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளன.

மேலும், உள்ளாட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் சமூகத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சிகள், செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒவ்வொரு வீட்டிலும் நிறுவனத்திலும் மழைநீரை அந்தந்த இடத்திலேயே சேகரித்து முறையாகப் பயன்படுத்தவும், கட்டமைப்புகளைத் தொடர்ந்து பராமரிக்கவும் பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

சிறப்பாகச் செயல்படுவோருக்கு அங்கீகாரம்

மழைநீர் சேமிப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு உரிய அங்கீகாரங்களும் விருதுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மேம்பாடு, நகர்ப்புற நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துதல் தொடர்பான தற்போதைய திட்டங்களுடன் இந்த இயக்கம் ஒருங்கிணைக்கப்படும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இவ்வியக்கத்திற்கான முதன்மைத் துறையாகச் செயல்படும். தொடர்புடைய அனைத்துத் துறைகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் நிறுவனங்கள் தங்களது வளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைச் சீரமைத்து முறையாகப் பராமரித்து, மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதன் மூலம் நீர்வளப் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply