வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பரபரப்பு: ஹீலியம் பலூன்கள் வெடித்து 4 பக்தர்கள் காயம்!
வேளாங்கண்ணி, ஆக.30:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்தின் போது எதிர்பாராத விதமாக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்ததில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.
கொடியேற்றத்தின் போது ஏற்பட்ட விபத்து
திருவிழாவையொட்டி புனிதக் கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடித்ததுடன், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களையும் பறக்கவிட ஏற்பாடு செய்திருந்தனர்.
பட்டாசுகளில் இருந்து பறந்த தீப்பொறி எதிர்பாராதவிதமாக ஹீலியம் பலூன்கள் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலூன்கள் தீப்பிடித்து பலத்த சத்தத்துடன் வெடித்தன.
4 பேர் தீக்காயம்
பலூன்கள் வெடித்ததில் கொடிமரத்தின் அருகே நின்றிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த கலைச்செல்வன், ரமேஷ், விஜய் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
இதில் கலைச்செல்வன் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை காவல்துறையினரும் விழாக்குழுவினரும் மீட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் பட்டாசு, கேஸ் பலூன்கள் பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வேளாங்கண்ணி திருவிழாவிற்கு தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், பேராலயப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசுகள் வெடிக்கும் இடங்கள் மற்றும் கேஸ் பலூன்கள் பயன்படுத்துவது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்