மின் கட்டணத்தில் 20%க்கு மேல் உயர்வா..? பில் தற்காலிகமாக நிறுத்தம் — மின்வாரியம் அதிரடி!
சென்னை:
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தில் திடீர் மற்றும் அதிகப்படியான மாறுபாடு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மின் பயன்பாடு 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரித்திருந்தால், அந்த மின் கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மறு சரிபார்ப்பு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கணக்குப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, குறிப்பிட்ட மின் இணைப்புகளில் தற்போதைய மின் பயன்பாடு, முந்தைய இரண்டு மாதங்களின் பயன்பாட்டுடன் ஒப்பிடப்படும்.
அதில் 20 சதவீதத்திற்கும் அதிகமான மின் பயன்பாடு பதிவாகியிருந்தால், அந்த இணைப்புக்கான கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அதிகாரிகள் நேரடியாக மீட்டர் ரீடிங்கை மறு சரிபார்ப்பு செய்வார்கள்.
மறு சரிபார்ப்பின்போது மீட்டர் ரீடிங் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால், உரிய முறையில் மறு மதிப்பீடு செய்து மின் கட்டணம் திருத்தப்படும். மீட்டர் ரீடிங் சரியாக இருந்தால், அதன் அடிப்படையில் கட்டணம் உருவாக்கப்படும்.
மேலும், மின் கட்டணத்தில் ஏற்பட்ட கூடுதல் தொகை தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மறு சரிபார்ப்பு மற்றும் பில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின் பயன்பாட்டில் திடீர் உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் கட்டணக் குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்