டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! பண்டிகை முன்பணம் ரூ.20,000 – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்புகள்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.
குறிப்பாக, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1, 2026 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு ஊதியம்?
டாஸ்மாக் பணியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிச்சூழலை கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி,
- மேற்பார்வையாளர்களுக்கு – ரூ.33,023
- விற்பனையாளர்களுக்கு – ரூ.30,284
- உதவி விற்பனையாளர்களுக்கு – ரூ.28,680
என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை முன்பணம் ரூ.20,000
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், ஆண்டுதோறும் ஊழியர்களுக்கு 3 சீருடைகள் வழங்கப்படுவதுடன், துணி மற்றும் தையல் செலவுகளுக்காக ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மணி நேர வேலை – வாரம் ஒரு நாள் விடுமுறை
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கப்படும்.
அத்துடன், வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறையும், மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதியுடைய டாஸ்மாக் பணியாளர்களில் 250 பேரை சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய தடுப்புக்கும் புதிய அறிவிப்புகள்
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு சிறை தண்டனை முடித்து மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளுக்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரூ.2.58 கோடி மதிப்பில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால பணிநிலையை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு மற்றும் பணிச்சலுகைகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக்குரல்