தேனி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை: ஆறுகள், அருவிகளில் குளிக்கத் தற்காலிகத் தடை!
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 15.10.2026 முதல் 17.10.2026 வரை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எல்லப்பட்டி ஆறு, கொட்டக்குடி ஆறு, வைகை ஆறு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகளிலும், கும்பக்கரை அருவி, குரங்கணி அருவி, சின்னச்சுருளி அருவி, கம்பம் சுருளி அருவி மற்றும் சிற்றாறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட ஆறுகள் மற்றும் அருவிகளில் குளிக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலைச் சாலைகளில் கவனமாகச் செல்ல அறிவுறுத்தல்
மேகமலை, தேக்கடி, போடிமெட்டு மற்றும் மூணாறு செல்லும் மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மலைச் சாலைகளில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் ஆறுகள் மற்றும் அருவிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்குரல்