ஆவடி அருகே கோலாகலமாக நடைபெற்ற ஓணம் விழா: கலை நிகழ்ச்சிகளுடன் 25 வகை கேரள உணவு விருந்து.

ஆவடி:

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர் பகுதியில் கைராலி மலையாள அசோசியன் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை விழா கோலாகலமாக நடைபெற்றது.

சங்கத்தின் சார்பில் கருணாகரன் ஏற்பாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமின் துணைவியார் பானு ரஹீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செண்டை மேளம் முழங்க மாவேலி மகாராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, ஓணம் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

விழாவின் முக்கிய நிகழ்வாக பெண்கள் மற்றும் சிறுமிகள் இணைந்து அத்தப்பூக்கோலம் அமைத்தனர். தொடர்ந்து சிறுமிகளின் நடனம், ஓணம் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலையாள பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை விழாவில் பங்கேற்றவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மலையாள இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழா, அப்பகுதியில் வசிக்கும் மலையாள மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கேரள பாரம்பரிய முறையில் ஓணம் விருந்து வழங்கப்பட்டது. இதில் சுமார் 25 வகையான கேரள உணவு வகைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விழாவில் கைராலி வெல்பர் அசோசியன் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தமிழகத்தில் வசிக்கும் மலையாள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த ஓணம் விழா சிறப்பாக அமைந்தது.

Leave a Reply